செவ்வாய், 15 மார்ச், 2011

எனக்கும் அந்த கண்றாவி (காதல்) வந்தபோது...



1
மனப்பாறை இடுக்குகளில்
கூழாங்கற்கள் உருள்கின்றன.


தாண்ட முடியாத,
பாம்புகள் அடர்ந்த
பாழும் கிணறு ஒன்றை
நாங்களும் தாண்டத் துணிந்தோம்.


மார்கழிக் காலையில்
மொண்டு குளிக்க வரும் உனக்காக
கிணற்று நீருக்குள்
ஒளித்து வைக்கிறேன்
என் உள்ளத்து கதகதப்பை.


இது ஒரு இசை நாற்காலி
இந்த நொடி நமக்கே நமக்கு.


5
ஆதலினால்
அரசு வேலை தேடுவீர்.


அது
வேகமாய் சுற்றும் ரங்கராட்டினத்தின்
இறங்கு விசை பரவசம்.


ரத்தத்தில் கடிதம் எழுதும்
காதல் கதைகளை இப்போது கேட்டால்
திகிலாக இருக்கிறது.


26 வயதினிலேயும்
அலைகள் ஓய்வதில்லை.


தமிழில்
FLAMES போட்டுப் பார்த்தேன்,
நம் இருவர் பெயரிலும்
ஒற்றெழுத்து இல்லை.


10
லவ்
அண்டு
லவ்
ஒன்லி.


11 
அப்துல் ரஹ்மானின் 'ஆலாபனை'
மு.மேத்தாவின் 'கண்ணீர்ப் பூக்கள்'
வைரமுத்துவின் 'காவி நிறத்தில் ஒரு காதல்'
பா.விஜயின் 'சில்மிஷியே'
தபூ ஷங்கரின் 'வெட்கத்தை கேட்டால் என்ன தருவாய்'
நாலு இட்லி
ஒரு மசால் தோசை
பார்சல்.


12 
தாமரைக் குளம்
உடைந்த வளையல்
தாவணிக் கனவு
கன்னத்து பரு
கவிதை ஓவர் ஓவர்.


13
காதலிப்பது என்பது
கடன் வாங்குவதைப் போல,
அவ்வளவு கஷ்டமில்லை.
கல்யாணம் செய்து கொள்வது என்பது
அந்தக் கடனை திருப்பிக் கொடுப்பது போல,
அவ்வளவு சுலபமில்லை.


14
எல்லார் போலவே
வாடகை வீடு
ரேஷன் கடை
மாத கடைசி
மளிகை கடை அக்கௌன்ட் என
'வாழ்ந்து காட்டவே' வந்திருக்கிறேன்.


15
காதல் கவிதை எழுதுவது
சாராயம் காய்ச்சுவதற்கு ஒப்பானது,
நாட்டுக்கு, வீட்டுக்கு, உயிருக்கு
இரண்டுமே கேடு.