வியாழன், 17 ஜூன், 2010

செந்தில்களின் அட்டகாசங்கள்



எனக்கு எக்கச்சக்கமான நண்பர்கள் இருக்கிறார்கள். அவர்களில் கணிசமானோர் 'செந்தில்' என்ற பெயரைக் கொண்டவர்கள். நான் பள்ளியில் படிக்கும்போது மிகக் குறைந்த அளவாக ஆறேழு செந்தில்களை மட்டுமே எனக்கு தெரியும். பிறகு கல்லூரியில் சேர்ந்தபோது 320 பேர் கொண்ட எங்களது வணிகவியல் துறையில் 23 செந்தில்கள் இருந்தார்கள். அவர்களின் பெயருக்குப் பின்னால் குமார், குமரன், நாதன், முருகன் என்று ஏதாவது ஒரு துணைப் பெயர் சும்மா பெயருக்கு ஒட்டிக் கொண்டிருக்கும். மற்றபடி அவர்கள் அனைவரும் செந்தில்கள் தான்.


ஏற்கனவே பல இன்னல்களுக்கு மத்தியில் வாழ்வை ஓட்டிக்கொண்டிருக்கும் எனக்கு செந்தில்களால் சில வினோதமான பிரச்னைகள் எழுந்தன. ஒரு செந்திலுக்கு போன் செய்வதாக நினைத்துக் கொண்டு, வேறு ஒரு செந்திலிடம் பேசிக் கொண்டிருப்பது, பண்டிகைகளின்போது ஒரு சில செந்தில்களுக்கே மீண்டும் மீண்டும் வாழ்த்து எஸ்.எம்.எஸ் அனுப்புவது என்று பிரச்னைகள் தொடர்ந்தன. என்னைப் போலவே பல செந்தில் நண்பர்களைக் கொண்ட என் நண்பர் ஒருவரிடம் கேட்டபோது, "செந்தில்களின் நம்பர்களை நான் மொபைல்-லில் பதிவு செய்வதில்லை. அவர்களுக்கென தனியாக நோட்டு போட்டு குறிப்புகளோடு எழுதி வைக்கிறேன்" என்றார்.

இப்படியாக எனக்கு மட்டுமல்ல, சில செந்தில்கள் சக செந்தில்மார்களுக்கே உபத்திரவம் கொடுத்தார்கள். நான் பள்ளியில் படிக்கும்போது, எங்களுடன் படித்த திம்மகுடி செந்திலின் தந்தை விபத்தில் இறந்துவிட்டார். தகவல் சொல்ல வந்த நபரை பள்ளி நிர்வாகம் வளாகத்திற்குள் அனுமதிக்கவில்லை. அவரிடமிருந்து தகவலைக் கேட்டு வகுப்பறையில் சொல்ல வந்த பியூன், திம்மகுடி செந்திலுக்கு பதிலாக மாடாகுடி செந்திலிடம் தகவலை சொல்லி விட்டார். மாடாகுடி செந்தில் அழுதபடி வீட்டிற்கு செல்ல, தந்தை இறந்த செய்தி அறியாத திம்மகுடி செந்தில் எங்களுடன் விளையாடிவிட்டு மாலையில்தான் வீட்டிற்கு சென்றான். பிறகு கல்லூரியில் படிக்கும்போது நன்றாக படிக்கும் T. செந்தில் குமாருக்கு தரப்பட்ட பரிசுத் தொகையை சரியான மக்கு பிளாஸ்திரியான D. செந்தில் குமார் ஆள்மாறாட்டம் செய்து வாங்கிச் சென்றுவிட்டான்.

இதுபோன்ற அடையாளக் குழப்பத்தை தவிர்ப்பதற்காக பள்ளியில் படிக்கும்போது செந்தில்களுக்கு ஆண்டி, மாங்கா, சாக்கு போன்ற பட்டைப் பெயர்களை வைத்து கூப்பிட ஆரம்பித்தோம். இதனால் ஓரளவிற்கு பிரச்னை தீர்ந்தது. பிறகு இந்தப் பட்டைப் பெயர் பழக்கம் கல்லூரியிலும் தொடர்ந்தது.

இது போன்ற அடையாளக் குழப்பங்களும், ஆள்மாறாட்டங்களும் செந்தில்களுக்கு மட்டும் வாய்ப்பதில்லை. சரவணன், கணேஷ், கார்த்திகேயன் போன்ற பெயர்களை கொண்டவர்களுக்கும் இருந்தன. ஆனால் எண்ணிக்கை அடிப்படையில் செந்தில்களின் கொடியே கோட்டையில் உயரப் பறந்தது. (இந்தியத் தேர்தல் ஆணையம் கூட இந்தியாவில் வாழும் செந்தில்களை கணக்கெடுத்து அவர்கள் அதிகமாக வாழும் தொகுதிகளை அவர்களுக்கான தனித் தொகுதிகளாக அறிவிக்கலாம்).

இந்தப் பிரச்னைகள் எல்லாம் இப்போது பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கு இருக்காது என்றே நினைக்கிறேன். இப்போதுள்ள பெற்றோர்கள் யதீஸ், நிதீஷ், ஸ்ரீ சரண் என்று வடசொற் கிளவியில் பெயர் சூட்டி மகிழ்கிறார்கள். உலகமயமாக்களுக்குப் பிறகு நடிகர், நடிகைகளின் பெயர்களை வைப்பதும் குறைந்து விட்டது. எனக்குத் தெரிந்த வகையில் கும்பகோணத்தை அடுத்த திருவலஞ்சுழியில் காவிரிக் கரையோரம் வாழும் குறவர் இன மக்கள் மட்டும் தங்கள் குழந்தைகளுக்கு அஜித், விஜய், சிம்பு, சிம்ரன், ஜோதிகா என பெயர் சூட்டுகிறார்கள். கிரிக்கெட் ரசிகர்களான ஒரு சில தமிழகப் பெற்றோர்கள் டெண்டுல்கர், கங்குலி போன்றவை சாதிகளின் பெயர் என்பதைகூட அறியாமல் தங்களின் குழந்தைகளுக்கு சூட்டுவதாக கேள்விப்பட்டேன்.

அத்துடன், பாட்டனாரின் பெயரை குழந்தைகளுக்கு சூட்டும் பழக்கம் தமிழ் சமூகத்தில் அறவே ஒழிக்கப்பட்டுவிட்டது. மற்ற எல்லா கொள்கைகளையும் காற்றில் பறக்க விட்டுவிட்ட திராவிட இயக்க தலைவர்கள் சிலர், பாட்டனாரின் பெயரை மட்டும் குழந்தைகளுக்கு வைத்திருப்பதையும் நாம் கவனிக்க வேண்டும். முத்துவேலரின் மகனான மு.கருணாதி, தனது மூத்த மகனுக்கு முத்து என்று பெயர் வைத்திருக்கிறார். வையாபுரியின் மகனான் வைகோ, தனது மகனுக்கு துரை வையாபுரி என்று பெயர் வைத்திருக்கிறார்.

பெரியார் பற்றிய ஒரு பழைய தகவல் நினைவுக்கு வருகிறது. ஒருமுறை இரண்டு குழந்தைகளை பெரியாரிடம் கொடுத்து பெயர் வைக்கச் சொல்லி இருக்கிறார்கள். பெரியார் ஒரு குழந்தைக்கு மாஸ்கோ என்றும், இன்னொரு குழந்தைக்கு பெர்லின் என்றும் பெயர் வைத்துவிட்டாராம். "என்ன இப்படி வச்சுட்டிங்களே?" என்று கேட்டதற்கு, "நீங்க மட்டும் சிதம்பரம், பழனி, திருப்பதின்னு பெயர் வைக்கலாம்... நான் மாஸ்கோ, பெர்லின்னு வைக்க கூடாதா?" என்று கேட்டாராம். சாதி, மதம், மொழி, இனம் என்று எல்லா மட்டங்களிலும் வன்முறைகளும், பயங்கரவாதமும் பெருகி வரும் நிலையில், எவ்வித அடையாளத்தையும் தராத பெயர்களை குழந்தைகளுக்கு வைப்பதே எதிர்கால சந்ததிக்கு நல்லது என்று தோன்றுகிறது.

என் மனைவி மட்டும் ஒப்புக்கொண்டால் என் மகனுக்கு 'லக்கி லூக்' என்றும், என் மகளுக்கு 'லவ்லி லூக்' என்றும் பெயர் வைக்க நினைத்திருக்கிறேன்.