புதன், 24 ஆகஸ்ட், 2011

அருந்ததி ராயின் எதிர்ப்புக் குரல்

அன்னா ஹசாரேவுக்கு நாடு முழுவதும் மக்கள் ஆதரவு பெருகி வருவதாக சொல்லப்படுகிறது. எனக்குத் தெரிந்த வரையில் அன்னா ஹசாரேவுக்கு ஆதரவாக சென்னையில் நடக்கும் ‘ஊழல் எதிர்ப்பு’ போராட்டத்தில் மேல்தட்டு வர்க்கத்தினரும் பார்ப்பனர்கள் - இந்துக்கள் என தங்களை அடையாளப்படுத்திக் கொள்பவர்களும், வட இந்தியர்களுமே அதிகம் தென்படுகிறார்கள் (இவர்கள் தவிர, சில ‘தமிழர்களும்,’ சில ‘சூத்திரர்களும்’ இடம் பெற்றிருக்கிறார்கள் என்பதை மறுப்பதற்கில்லை). ஆனால், இந்தப் போராட்டம் நாடு முழுவதும் தீ போல பரவி வருவதாக ஊடகங்கள் பரப்பி வருகின்றன. ஊடகத்தில் பணிபுரியும் எனக்கே இது விசித்திரமாகப் படுகிறது. சமூகப் போராளி அருந்ததி ராயின் ‘மக்கள் ஆதரவு’ பற்றிய பேச்சு, இந்த விசித்திரத்திற்கு விடை தருகிறது…


“மக்கள் ஆதரவு… மக்கள் ஆதரவு… என்கிறார்கள். இந்த ‘மக்கள்’ கடந்த 10 ஆண்டுகளாக, ஆயுதப் படைகளுக்கு வழங்கிய சிறப்பு அதிகாரச் சட்டத்தைத் திரும்பப் பெறக் கோரி பட்டினிப் போராட்டம் மேற்கொண்டு வரும் இரோம் ஷர்மிளாவுக்கு ஆதரவளிக்கும் மக்கள் அல்ல. இந்த ‘மக்கள்’ பாஸ்கோ திட்டத்துக்கு எதிராக, கடந்த ஆறு வருடங்களாகப் போராடி வரும் ஜகத்சிங்பூர் மக்களின் போராட்டத்துக்கு ஆதரவு அளிக்கும் மக்கள் அல்ல. இந்த ‘மக்கள்’ கங்கை ஆறு மாசுபட்டு வருகிறது, அதனால் சுரங்கத் தொழிலைத் தடை செய்ய வேண்டும் என்று கூறி பட்டினிப் போராட்டம் நடத்திச் செத்துப்போன சுவாமி நிகமானந்த்க்கு ஆதரவு அளித்தவர்கள் அல்ல. 


இந்த ‘மக்கள்’ நியாம்கிரி மலையில் வேதாந்தா நிறுவனம் நடத்தி வருகிற சுரண்டலுக்கு எதிராகக் குரல் கொடுக்கும் பழங்குடியினருக்கு ஆதரவு அளிப்பவர்கள் அல்ல. இந்த ‘மக்கள்’ கூடங்குளம் அணுமின் நிலையத்துக்கு எதிராகத் தொடர் உண்ணாவிரதம் இருக்கும் மக்களுடன் நிற்பவர்கள் அல்ல. இந்த ‘மக்கள்’ ஹரியானாவிலும், நொய்டாவிலும் தற்கொலை செய்து சாகும் விவசாயிகளின் நிலையைக் கண்டு மனம் கொதித்தவர்கள் அல்ல. இந்த ‘மக்கள்’ நர்மதா அணையால் இடப்பெயர்வுக்கு உள்ளாகும் ஆதிவாசிகளின் நிலையை உணர்ந்தவர்கள் அல்ல. ஆனால், காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை மக்கள் ஆதரவு பெருகுகிறது என்கிறார்கள். உண்மையில் இது வெறும் நாடகப் பிரச்சாரம்!” - அருந்ததி ராய் 

செவ்வாய், 10 மே, 2011

அகத்தகத்தகத்தினிலே



உன்னைப் பார்க்கும்வரை
மழையின் மைந்தனாய் இருந்தேன்

அருவியின் தோழனானேன்

நதியாய் நடந்தேன் கடல் நோக்கி

அருவியைக் கொளுத்தும்
தீக்குச்சியோடு நீ வந்தாய்

என் கடல் வற்றியது

நீருபூத்த நெருப்பாய்
உன் ஞாபகங்கள் உள்ளுக்குள்
கனலத் தொடங்கின

எனக்கே தெரியாமல்
என் மனத்திரி கிள்ளி
நெருப்பு வைத்தாய்

மழையின் மைந்தன்
தனலில் கரைந்தேன்

தனல் உறங்கச் செல்லும்
ஒரு நாளில்
பருவ மழை வருமென
செய்தி வந்தது

பருவமழை பல கடந்தும்
அருவியைக் கொளுத்தும்
தீக்குச்சியோடு
நீ வருவாய் என தெரியும்

திங்கள், 9 மே, 2011

ஒரு குழந்தை உறங்குகிறது




ஒரு குழந்தை உறங்குகிறது


தேவதைகளே...

அவளுக்கு
வேர்க்காமல் விசிறிவிடுங்கள்

என் பாலைவனத்தில்
பாதம் பதித்து
நந்தவனமாக்கிய பிஞ்சு
விரல்களை நீவி விடுங்கள்

பொம்மைகளோடு கொஞ்சிக்கொஞ்சி
சோர்வடைந்த கை விரல்களில்
வலிக்காமல் சொடுக்கெடுங்கள்

காற்றில் நழுவும் மேலாடையை
விரல்படாமல் சரி செய்யுங்கள்

அவள் புரண்டு படுக்கையில்
கொலுசொலி கேட்டு
உறக்கம் கலையாது
இருக்க உதவுங்கள்

ஆழ்ந்த உறக்கத்தில்
அவள் நல்ல கனவே காண
நெற்றியில் முத்தமிட்டு
ஆசீர்வதியுங்கள்

என்னைப் போலவே
அவளது எச்சில் வழியும் முத்தத்தை
யாசகம் பெற்று பத்திரப்படுத்துங்கள்

அனுபூதி அடைவீர்கள்

வெள்ளி, 6 மே, 2011

கே.வி.ஆனந்தின் ‘என்னமோ, ஏதோ!’



இந்த வலைப்பக்கத்தில் சினிமா விமர்சனங்கள் எழுதுவதில்லை என்று நினைத்திருந்தேன். ஆனால், தமிழ் சினிமாவில் கே.வி.ஆனந்த் தூவியிருக்கும் கோ என்கிற விஷ விதை என்னை எழுத வைக்கிறது.

எண்பதாண்டு கால தமிழ் சினிமா வரலாற்றில் அரசியல் திரைப்படங்கள் என்பவை பெரும்பாலும் அரைவேக்காட்டுத் தனமாகவே எடுக்கப்பட்டுள்ளன என்பதை யாராலும் மறுக்க முடியாது. பராசக்தி, தண்ணீர் தண்ணீர், குப்பி போன்ற வெகு சில அரசியல் திரைப்படங்கள் இவற்றில் விதிவிலக்கு.

தமிழ் சினிமாவின் ஆகப்பெரும் ஜாம்பவான்களாக பேசப்பட்ட இயக்குனர்களே இடறி விழும் பள்ளமாக இன்னமும் இருப்பது அரசியல் திரைப்பட முயற்சிகள்தான். அதற்கு வாழும் உதாரணமாக கண்முன் நிற்பவர் மணிரத்னம். மணிரத்னத்தின் ரோஜா தொடங்கி, ராவணன் வரைக்குமான அனைத்து அரசியல் திரைப்படங்களும் அரைவேக்காட்டுத் தனமானவை என்பது சொல்லித் தெரிய வேண்டியதில்லை. அவருக்கு அடுத்தபடியாக அரசியல் படங்களை குத்தகைக்கு எடுத்திருப்பவர் இயக்குனர் ஷங்கர். தி.மு.கவின் ஊழல்களைப் போல அரசியலை என்னதான் பிரம்மாண்டமாக திரையில் காட்டினாலும், அது இட்லி உப்புமா தவிர வேறில்லை.

இன்னொரு பக்கம், "எனக்கு குஜராத்தைக் காட்டிலும் ஈரோடு பக்கமாகத் தெரிகிறது" என்று திராவிடத்தையும், தேசியத்தையும் தயிர் சாதத்தோடு சேர்த்து, நீண்ட காலமாகப் பிசைந்து வரும் கமல்ஹாசனின் இந்துத்துவா முகம் உன்னைப் போல் ஒருவன் படத்தில் கிழிந்தது.

இப்படிப்பட்ட சூழலில் எங்கூட்டுக்காரனும் கச்சேரிக்குப் போன கதையாக அரசியல் படம் ஒன்றை எடுத்திருக்கிறார் இயக்குனர் கே.வி.ஆனந்த். ‘ஸ்கூப் நியூஸ்’ மூலம் இருவேறு அரசியல் எதிரிகளை அடுத்தடுத்து பந்தாடும் ‘தின அஞ்சல்’ நாளிதழ், மாற்று அரசியலை முன்வைக்க நினைத்து இளைஞர்கள் ஆட்சியில் அமர்வதற்கு வழிவகுக்கிறது. அந்த இளைஞன் ஆட்சியில் அமர்ந்த பின்பே தெரிகிறது, ஏற்கனவே இருந்த அரசியல் முதலைகளைவிட இவன் மிகப் பெரிய முதலை என்பது. இந்த புதிய அரசியல் முதலைக்கு பக்கபலமாக இருப்பது நக்சல்களாம்!

தமிழகத்தில் நேர்மையாக, துணிச்சலாக தமிழ்ப் பத்திரிகை நடத்தி, போலிகளின் முகத்திரையை கிழிக்கும் வடநாட்டுப் பதிப்பாளரைப் பார்த்து “பிழைக்க வந்தவன்” என்கிறான் வில்லன். இந்தக் காட்சியின் மூலம் பிராந்திய அரசியல் பேசுகிறவர்களை வில்லன்களாகவும், சுயநல அரசியல்வாதிகளாகவும் சித்தரிக்கிறார் இயக்குனர்.

அடுத்தபடியாக மாற்று அரசியலை முன்வைக்க நினைத்து, அரசியலில் கால்பதிக்கும் இளைஞர்களின் பக்கம் திரும்பியிருக்கிறது கே.வி.ஆனந்தின் பார்வை. பத்திரிகையே படிக்காத, தொலைக்காட்சியில் செய்தி பார்க்காத, சமூகப் பிரக்ஞை துளியும் இல்லாத ஒரு தலைமுறையில், அங்கொன்றும் இங்கொன்றுமாக இப்போதுதான் புதிய சிந்தனைகளுடன் இளைஞர்கள் அரசியலுக்கு வருகிறார்கள். அதற்குள்ளாக அவர்களையும் காயடித்து, அடுத்த தலைமுறையையும் நான்காம்தர அரசியல்வாதிகளிடம் ஒப்படைக்கச் சொல்கிறார் ஸ்ரீமான் கே.வி.ஆனந்த்.



எல்லாவற்றுக்கும் மேலாக, நக்சல்கள் குறித்த கே.வி.ஆனந்தின் பார்வைதான் புல்லரிக்கவைக்கிறது. “ஆர்ப்பாட்டம், உண்ணாவிரதம்னு அரசியல்வாதிங்கதான் டயலாக் வச்சிருக்காங்கன்னா, நீங்க ஒடுக்கப்பட்டவர்கள், சுரண்டல்னு டயலாக் வச்சிருக்கீங்க” என்று நக்சல்களைப் கே.வி.ஆனந்தின் ஹீரோ புரட்சி வசனம் பேசுகிறான். உலக அளவில் அறிவாளிகள் (Intellectuals) நிறைந்த ஒரு போராட்டக் குழுவாக பேசப்படும் மாவோயிஸ்ட் இயக்கம், தண்டகாரண்யத்தில் அரசால் செய்ய முடியாத சேவைகளை பழங்குடியின மக்களுக்கு வழங்கி வருகிறது. பல்லாண்டுகளாக அரசு உயர் அதிகாரிகளின் காலடி பட்டிராத வனப்பகுதிகளில் பள்ளிக்கூடங்களையும், மருத்துவமனைகளையும் நடத்தி வருகிறார்கள் மாவோயிஸ்ட்கள். ப.சிதம்பரம் போன்ற அரசியல் அயோக்கியர்களின் சுயநலத்திற்காக, வேதாந்தா போன்ற பன்னாட்டு பண முதலைகளுக்கு வனவளமும், பழங்குடியின மக்களின் வாழ்வாதாரமும் தாரைவார்க்கப்படுவதை எதிர்த்துதான் மாவோயிஸ்டுகள் போராடி வருகின்றனர். இதுபோன்ற உண்மைகள் எதுவும் தெரியாமல், கல்லூரி நண்பனை முதலமைச்சராக்க, பொதுக்கூட்ட மேடையில் நக்சல்கள் வெடிகுண்டு வைப்பதாகவும், தங்களது சுயநலத்திற்காக அப்பாவி பொதுமக்களைக் கொல்வதாகவும் சித்தரிக்கிறார் இயக்குனர். சமூக அக்கறை இல்லாமல், வெற்றியும் அதனால் கிடைக்கும் பணமுமே குறிக்கோளாகக் கொண்டிருக்கும் கே.வி.ஆனந்தின் பார்ப்பனீய முகத்தின் வெளிப்பாடே கோ!

புதன், 27 ஏப்ரல், 2011

நாஞ்சில் நாட்டு பருவமழை

நாஞ்சில் நாடனின் எழுத்துக்களை மிகச் சமீபத்தில்தான் படிக்கத் தொடங்கினேன். ஆனந்த் செல்லையா போன்ற நண்பர்களின் முன்னுரையோடு நாஞ்சில் நாடனை அணுகிய போது, அவரது எழுத்துக்களின் ஆழத்தை இன்னும் நெருக்கமாக ரசிக்க முடிந்தது. நாஞ்சில் நாட்டின் பருவ மழையை நான் பார்த்ததில்லை. ஆனால் அதன் வசீகரத்தையும், அதில் நனைந்து மனம் கரையும் அனுபவத்தையும் அவரது எழுத்துக்களின் மூலம் உணர முடிகிறது. ஒரு ஓய்வு நாளில் கும்பகோணம் சென்றபோது அவரது ‘சூடிய பூ சூடற்க’ படித்தேன். அதைப் பற்றி இரவெல்லாம் யோசித்தபடி இருந்தேன். விடிந்தபின்னும் அவரது சொல்லாட்சிகள் மனசைவிட்டு அகலவேயில்லை.

சென்னை திரும்பியபிறகு அவரது ‘பச்சை நாயகி’, ‘எட்டுத் திக்கும் மதயானை’ ஆகிய தலைப்புகளுக்கு, தலா ஒரு கொலாஜ் ஓவியம் வரைய முடிவெடுத்தேன். வரைவதற்கான சாத்தியக்கூறுகள் முற்றிலும் குறைவான பெயிண்ட் பிரஷ் மென்பொருளில் இந்த கொலாஜ் ஓவியங்களை வரைந்திருக்கிறேன். இது நாஞ்சில் நாடனுக்கு நான் செலுத்தும் நன்றி, மரியாதை, வாழ்த்து - இப்படி ஏதாவது ஒன்றாக வைத்துக் கொள்ளலாம்.